சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சில கார் விற்பனை நிறுவனங்கள், “முன்கட்டணம் இன்றி 100 விழுக்காடு கடன்” வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. வாகனத்தின் விலையின் 30 முதல் 40 விழுக்காடு வரை தொகையை மாற்று கடன் திட்டங்கள் மூலம் செலுத்தலாம் என்றும், நிறுவனங்களே நேரடியாக கடன் வழங்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நீண்டகால நிதிச்சுமைக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
யியோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோங் வெங், இத்தகைய திட்டங்களுக்கும் அதிகாரப்பூர்வ கடன் திட்டங்களுக்கு இணையான பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். வாடிக்கையாளர்களின் நலனை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செங்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி திங் ரு, நிறுவனங்கள் தாங்களே கடன் வழங்குவதை கட்டுப்படுத்த அரசாங்கம் சிங்கப்பூர் நாணய ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், விதிமுறைகளுக்குட்பட்ட ஏற்பாடுகள் மூலம் கடன் பெறுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். தேவையானால் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இறுதியில், சிங்கப்பூர் குடும்பங்கள் வாகனம் வாங்க பெற்றுள்ள மற்றும் இன்னும் செலுத்தப்படாத மொத்தக் கடன் தொகை சுமார் 12.4 பில்லியன் வெள்ளியாக பதிவானது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்நிலையில், முழுக் கடன் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது.