கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்க முடக்கத்தை நீக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபி ஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி பக்கத்தை தொடங்கினார்.
இந்தநிலையில் உலகளவில் கவனம் பெற்ற ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘ X’ சமூக வலைதளப் பக்கம் அண்மையில் மத்திய அரசால் அதிரடியாக முடக்கப்பட்டது. இந்த முடக்கத்தை நீக்கி,எக்ஸ் பக்கத்தை உடனடியாக மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி, அபிஜீத்திப்கே டெல்லி ஐகோர்ட்டில் அவசர வழக்குதொடர்ந்தார்.
நேற்று (மே 29) இந்த வழக்கு நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அகில் சிபல்,” இது வெறும் நையாண்டி பக்கம்தான் இதில் ஏதேனும் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட பதிவுகளை மட்டுமே நீக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்த கணக்கையும் முடக்குவது சட்டப்படி தவறு என்று வாதிட்டார்.
மத்திய அரசு எதிர்ப்பு: ஆனால் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. “இப்போதே முடக்கத்தை நீக்கினால் அது மனுவை ஏற்பதாகிவிடும். இந்த கணக்கின் ஒட்டுமொத்த செயல்பாடே ஆட்சேபனைக்குரிய தாக உள்ளது” என கடுமையாக எதிர்த்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் கரப்பான்பூச்சி கட்சியின் எக்ஸ் பக்கத்தின் முடக்கத்தை உடனடியாக நீக்க மறுத்துவிட்டார். எனினும், தகவல் தொழில்நுட்ப கீழ் செயல்படும் மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு விவரங்களை முழுமையாக பரிசீலித்து வரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஒத்திவைப்பு: மேலும் மனுதாரர் அபிஜீத் தீப்கே இந்த குழுவின் முன்பாக காணொளி வாயிலாக ஆஜராகி தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கலாம் என்றும், குழுவிற்கு திருப்தி ஏற்பட்டால் கணக்கை மீண்டும் திறக்க சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் எக்ஸ் நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட கோர்ட்டு அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.