உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை...!! பிரான்சில் விருது வென்ற 'The Violinist'..!!
சிங்கப்பூர்: ‘த வயலினிஸ்ட்’ (The Violinist) என்ற சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படம் பிரான்சில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆன்சி அனைத்து உலக உயிரோவியத் திரைப்பட விழாவில் (Annecy International Animation Film Festival) மிக உயரிய விருதான “கிரிஸ்டல்” (CristalAward) என்ற விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
உயிரோவியத்துறையின் ஆஸ்கார் என கருதப்படும் அன்சி விழாவின் 66 ஆண்டுகால வரலாற்றில் முதன்மை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கிரிஸ்டல் விருதை வென்ற முதல் சிங்கப்பூர் திரைப்படமாக இது திகழ்கிறது.
சிறந்த திரைப்படத்திற்கான விருது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காண ‘SACEM’ விருதும் கிடைத்துள்ளது.
இத்திரைப்படம் காலனித்துவ சிங்கப்பூர் (1929), இரண்டாம் உலகப்போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு பிந்தைய சுதந்திர காலகட்டம் என கிட்டத்தட்ட 80 ஆண்டுகால வரலாற்றைப் பற்றி பேசும் படமாகும்.
போரினால் பிரிந்து போகும் ஃபெய், காய் என்ற 2 இசைக்கலைஞர்களான சிறு வயது நண்பர்களின் கதையை, இசை மற்றும் நினைவுகளின் வழியே உணர்வுப்பூர்வமாக இந்த திரைப்படம் கடத்துகிறது.
இத்திரைப்படத்தை சிங்கப்பூரின் ‘ரோபோட் ப்ளேகிரவுண்ட் மீடியா’ ஸ்பெயினின் ‘டிவி ஆன் ப்ரொடக்ஷியோனெஸ்’ மற்றும் இத்தாலியின் ‘அல்ட்ரி ஓச்சி’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதற்கு சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA), 3 நாடுகளையும் சேர்ந்த பிற பொது அமைப்புகளும் ஒளிபரப்பு நிறுவனங்களும் ஆதரித்துள்ளன.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.