சிங்கப்பூரில் துரியான் கடையில் பரபரப்பு..!!ஒரு நிமிடத்திற்குள் நடந்த திருட்டு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் யிஷுன் பகுதியில் உள்ள துரியான் பழக் கடையில், ஊழியர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி மேசையில் வைக்கப்பட்டிருந்த கைபேசியை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் 20ஆம் தேதி மாலை சுமார் 6.10 மணியளவில், யிஷுன் தெரு 72-ல் அமைந்துள்ள ‘துரியான் லா’ என்ற துரியான் கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில், நீல நிறத் தொப்பி மற்றும் வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர் கடைக்குள் நடந்து வருவது பதிவாகியுள்ளது. அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது போல் கட்டு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் புகைப்பிடித்தபடி சுற்றுப்புறத்தை நோட்டமிட்டதுடன், இரண்டு முறை சிசிடிவி கேமராவையும் நேராகப் பார்த்துள்ளார்.
அப்போது கடையின் மேசை மீது இரண்டு கைபேசிகள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்த நபர் தனது உடலால் கேமராவின் பார்வையை மறைக்க முயன்றபடி, மேசைக்கு முதுகைக் காட்டியவாறு திரும்பியுள்ளார்.
அதன்பிறகு, தனது இடது கையை நீட்டி மேசையில் இருந்த கைபேசிகளில் ஒன்றை எடுத்த அவர், அதை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த முழு சம்பவமும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு குறித்து அறிந்த துரியான் கடை உரிமையாளர், பட்டப்பகலில் தனது ஊழியரின் கைபேசியை திருடிச் சென்ற நபரை கண்டித்துள்ளார். மேலும், கைபேசியை திருப்பிக் கொடுக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக துரியான் கடையின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்றிருந்ததால், கடையில் இருந்த மேசையை யாரும் கவனிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிசிடிவியில் பதிவான நபரை இதற்கு முன்பு பார்த்தது போல் இருந்ததாகவும், ஆனால் அவர் தங்களது வழக்கமான வாடிக்கையாளர்களில் ஒருவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட கைபேசி இதுவரை திருப்பிக் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
