சிங்கப்பூர் பள்ளி விளையாட்டுகளில் முக்கிய மாற்றம்..! 2029 முதல் டிராம்போலின் நீக்கம்!

சிங்கப்பூரின் தேசியப் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் (NSG) இருந்து டிராம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவு 2029ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நீக்கப்பட உள்ளது.
கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில், இந்தப் பிரிவில் தொடர்ந்து குறைந்த அளவிலான மாணவர் பங்கேற்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டில் மூன்று இரண்டாம் நிலைப் பள்ளிப் பிரிவுகளிலும் டிராம்போலின் போட்டிகள் வழக்கம்போல் நடைபெறும்.
2028ஆம் ஆண்டில் ‘A’ மற்றும் ‘B’ பிரிவுகளில் மட்டும் போட்டிகள் நடத்தப்படும். அதிலும் குறைந்தது இரண்டு வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பதிவு செய்திருந்தால் மட்டுமே போட்டி நடைபெறும்.
பாதிக்கப்படும் மாணவர் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில், சிங்கப்பூர் ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்புடன் இணைந்து மாற்று ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொள்ள உள்ளது.
சிங்கப்பூர் ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பு இந்த முடிவு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த மாற்றம் ஏமாற்றமளிப்பதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
டிராம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ் பள்ளிப் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் இந்த விளையாட்டின் வளர்ச்சியை தொடர்ந்து ஆதரிக்கவும், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் மூலம் மாணவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்புகளை வழங்கவும் சிங்கப்பூர் ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
