ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உள்ள கோக்கோ நகரில் உடன் தங்கி இருந்த பெண்ணின் வாயை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய 49 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 49 வயதுடைய மசே சகுராய் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஒரே அறையில் 42 வயதுடைய மற்றொரு பெண்ணும் தங்கியுள்ளார்.

சாகுராய் தனது அறையில் தங்கி இருந்த பெண்ணின் மேல் மற்றும் கீழ் உதடுகளை ஊசி நூலால் பல இடங்களில் சேர்த்து தைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணால் பேசவோ, உணவு உட்கொள்ளவோ முடியாமல் போய் உள்ளது.

இச்சம்பவம் ஆனது ஜூன் 29ஆம் தேதி அன்று மதியம் 1:30 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சாகுராய்க்கு பயந்து உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறாமல், மறுநாள் (ஜூன் 30) சாகுராய் வீட்டை விட்டு வெளியே சென்ற சமயம் பார்த்து அங்கிருந்து தப்பித்து ஓடி அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

வாய் தைக்கப்பட்டு இருந்ததால் அவரால் பேச முடியவில்லை. எனவே ஒரு காகிதத்தில் தயவு செய்து எனக்கு உதவுங்கள் என்று எழுதி அங்கிருந்த ஊழியரிடம் காட்டியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் உடனடியாக காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறை, ஜூலை 6 ஆம் தேதி அன்று சாகுராயை கைது செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், இந்த 2 பெண்களும் ஏப்ரல் 2025 முதல் ஒன்றாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அப்பெண் எதற்காக இந்த விபரீத செயலில் ஈடுபட்டார் என்ற காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை எனவும், இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.