கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு...!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் எழுந்துள்ள அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடான அமெரிக்காவின் பல மாநிலங்களைச் சூழ்ந்து பெரும் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா முழுவதும் தற்போது 800க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் முதல் வடகிழக்கு வரையிலான பல பகுதிகளில் அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மட்டும் 130க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, அதில் 60-க்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டை மீறி எரிகின்றன. இதுவரை மில்லியன் கணக்கான ஹெக்டேர் காடுகள் சாம்பல் ஆகி உள்ளன.

ஒன்டாரியோ பகுதியில் சரக்கு ரயில் ஒன்று காட்டுத்தீயில் முற்றிலும் சூழப்பட்ட நிலையில் அதிலிருந்த ஊழியர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அவசரமாக மீட்டெடுக்கப்பட்டனர். பல பூர்வகுடி கிராமங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சிகாகோ மற்றும் டெட்ராய்ட் ஆகிய அமெரிக்க நகரங்கள் உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளன. டெட்ராய்டு நகரில் காற்றின் தரக் குறியீடு (AQI) அபாயகரமான அளவான 600-யைத் தொட்டுள்ளது.

நியூயார்க் நகரின் புகழ்பெற்ற மேன்ஹாட்டன் கட்டிடங்கள் மற்றும் வானலைகள் அனைத்தும் அடர்ந்த நச்சுப் புகை மூட்டத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க், மினசோட்டா, விஸ்கான்சின், மிச்சிகன்  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாச பிரச்சனை இருப்பவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் நூலகங்களில் இலவச முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடுமையான வெப்பம் மற்றும் காற்று மாசுபாட்டைத் தாங்க முடியாதவர்களுக்காக நூற்றுக்கணக்கான குளிர்விப்பு மையங்கள் (Cooling Centers) திறக்கப்பட்டுள்ளன.