சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…!

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி...!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சாலைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது உள்ளதை விட மிகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

சட்டத் திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது பேசிய உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், சிங்கப்பூரில் நிகழும் பெரும்பாலான சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பது அரசின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 149 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இது நாட்டில் இதுவரை பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். சராசரியாக இரண்டு நாளுக்கு ஒருமுறை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

புதிய மசோதாவின் முக்கிய அம்சமாக, வேண்டுமென்றே மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்துவோருக்கு தனி குற்றப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது. தற்போது இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் நிலையில், புதிய சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, தேவையானால் பிரம்படி, அபராதம் மற்றும் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டத் தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

 

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் நோக்கில், ஓட்டுநர்களுக்கான அனுமதிக்கப்பட்ட மது அளவையும் அரசு குறைக்க முன்வந்துள்ளது. மூச்சுக்காற்றில் அனுமதிக்கப்படும் மதுவின் அளவு 100 மில்லிலிட்டருக்கு 35 மைக்ரோகிராமில் இருந்து 15 மைக்ரோகிராமாகவும், ரத்தத்தில் அனுமதிக்கப்படும் அளவு 100 மில்லிலிட்டருக்கு 80 மில்லிகிராமில் இருந்து 30 மில்லிகிராமாகவும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது

அதேபோல், வாகனம் நகர்ந்து கொண்டிருக்கும்போது கைப்பேசியை கையில் வைத்திருப்பதே குற்றமாகக் கருதப்படும் என்ற புதிய விதியும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இதுவரை கைப்பேசியைப் பயன்படுத்தியதை நிரூபிக்க வேண்டியிருந்த நிலையில், இனி கையில் வைத்திருப்பது மட்டுமே நடவடிக்கைக்கு போதுமானதாக இருக்கும்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாகக் குறைத்து, அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த சட்டத் திருத்தங்களின் முக்கிய நோக்கம் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சாலைப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக இது அமையும்.