மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்!

மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்!

மலேசியாவில் ஓடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து திடீரென தீப்பற்றிய சம்பவத்தில், அதில் பயணம் செய்த 14 பயணிகளும் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பேருந்து ஜொகூர் பாருவிலிருந்து சுபாங் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது.

பேருந்து PLUS நெடுஞ்சாலையில் பத்து பஹாட் (Batu Pahat) அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் தீ ஏற்பட்டதை அறிந்ததும் பயணிகளும் ஓட்டுநரும் உடனடியாக வெளியேற முயன்றனர்

தீ வேகமாகப் பரவுவதற்கு முன்பாகவே அனைவரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த 14 பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், பிற்பகல் 2.50 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இருப்பினும், இந்தத் தீ விபத்தில் சுற்றுலாப் பேருந்து சுமார் 80 விழுக்காடு சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.