சிங்கப்பூரில் வளர்ப்புத் தந்தையை கொன்ற பெண்..!! மேல்முறையீட்டில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் வீட்டு உரிமை தொடர்பான பிரச்சினையில் தனது 67 வயது வளர்ப்புத் தந்தையை கொலை செய்த 35 வயது பெண்ணுக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Tan Qiu Yan என்ற அந்தப் பெண், 2022ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தனது வளர்ப்புத் தந்தை Tan Ah Bang-ஐ கத்தியால் பலமுறை தாக்கினார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.
தனது வளர்ப்புத் தாய் உயிருடன் இருந்தபோது, செங்காங் பகுதியில் உள்ள குடும்ப வீட்டின் தனது பங்கை தனக்கு விட்டுச் செல்லப் போவதாக Tan Qiu Yan-க்கு உறுதியளித்திருந்தார். ஆனால், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது வளர்ப்புத் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டின் உரிமைப் பங்கு சட்டப்படி வளர்ப்புத் தந்தையின் பெயருக்கு சென்றது.
இதையடுத்து, வீட்டின் உரிமை தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரித்தபோது, தன்னை வீட்டின் உரிமையாளராக சேர்க்க முடியாது என்பதை அறிந்த அவர், வளர்ப்புத் தந்தை தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார் என அஞ்சியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தன்று, வளர்ப்புத் தந்தை தொலைபேசியில் பேசுவதைக் கேட்ட Tan Qiu Yan, அவர் வீட்டின் உரிமையை மாற்றுவது குறித்து திட்டமிடுவதாக நினைத்தார். பின்னர் கத்தியை பயன்படுத்திப் பழகிய அவர், முதலில் வீட்டை தன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறாரா என்று வளர்ப்புத் தந்தையிடம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததைத் தொடர்ந்து, கழிவறையில் இருந்த அவரை கத்தியால் பலமுறை தாக்கினார்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், கொலைக்கு இணையான குற்றமாக கருதப்படும் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தின்போது அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அதன் காரணமாக குறைக்கப்பட்ட குற்றப்பொறுப்பு என்ற பகுதி தற்காப்பு வாதம் ஏற்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
தனது 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 12 முதல் 15 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்ததுடன், 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளவுக்கு அதிகமானது அல்ல என்றும் தீர்ப்பளித்தது.
மேலும், வளர்ப்புத் தந்தை தன்னை கொல்லப் போவதாக நம்பியதாலேயே அவரைக் கொன்றதாக அவர் மேல்முறையீட்டில் கூறியிருந்தார். ஆனால், இந்தக் காரணத்தை அவர் முன்பு முன்வைக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை தொடர்ந்து அமலில் இருக்கும் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
