SCDF வருவதற்குள் நடந்த அதிரடி..!! உட்லண்ட்ஸ் HDB தீயை அணைத்த குடியிருப்பாளர்கள்..!!

SCDF வருவதற்குள் நடந்த அதிரடி..!! உட்லண்ட்ஸ் HDB தீயை அணைத்த குடியிருப்பாளர்கள்..!!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றின் பொதுநடைபாதையில் திடீரென தீப்பிடித்த சம்பவத்தில், அப்பகுதி குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்து, அருகில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு சுமார் 9:35 மணியளவில் உட்லண்ட்ஸ் 6th அவென்யூவில் உள்ள பிளாக் 693B பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுநடைபாதையில் இருந்த காலணி வைக்கும் அலமாரியில் இருந்த பொருட்களில் தீப்பற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

நடைபாதையில் தீ மற்றும் அதிகளவு புகை வெளியேறியதை கவனித்த குடியிருப்பாளர் ஒருவர் உடனடியாக தீயணைப்பானை எடுத்துக்கொண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, தீக்கு அருகிலிருந்த குடியிருப்புகளில் இருந்த 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற உதவியுள்ளார். மற்றொரு குடியிருப்பாளரும் “தீப்பிடித்துவிட்டது” என்று தொடர்ந்து எச்சரித்து, அண்டை வீட்டினரை வெளியே வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தீயின் தீவிரத்தை பார்த்ததும் அருகில் வசித்த பலரும் உதவிக்கு வந்துள்ளனர். சிலர் வாளிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

பின்னர் குடியிருப்பாளர்கள் இணைந்து HDB கட்டிடத்தில் இருந்த தீயணைப்பு நீர்க்குழாயை பயன்படுத்தி, SCDF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தீயை முழுமையாக அணைத்துள்ளனர்.

SCDF-க்கு இரவு சுமார் 9:35 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. ஆனால் SCDF அதிகாரிகள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் தீயை அணைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தீப்பற்றியதை பார்த்ததும் ஒருவர் மட்டும் உதவாமல், பல குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்கவும், அருகில் இருந்தவர்களை வெளியேற்றவும் உதவியுள்ளனர்.

அவசர நேரத்தில் அண்டை வீட்டினர் ஒருவருக்கொருவர் உதவிய இந்தச் சம்பவம், உட்லண்ட்ஸ் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.