நண்டு காலில் இருந்தது என்ன..? உணவகத்திடம் விளக்கம் கேட்ட வாடிக்கையாளர்..!

நண்டு காலில் இருந்தது என்ன..? உணவகத்திடம் விளக்கம் கேட்ட வாடிக்கையாளர்..!

சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் நண்டு மீன் நூடுல்ஸ் (Crab Rice Noodle Soup) சாப்பிட்ட வாடிக்கையாளர், நண்டின் கால் மூட்டு பகுதியில் சேறு போன்ற கருப்பு நிறப் பொருள் இருந்ததாகக் கூறி புகார் அளித்துள்ளார். இதனால் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இரவு, Chicken Pie Kitchen & Don Signature Crab உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது துணையுடன் நண்டு மீன் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார்.
அப்போது நண்டின் கால் மூட்டு பகுதியில் சேறு போன்ற கருப்பு நிறப் பொருள் ஒட்டியிருப்பதை அவர் கவனித்ததாக சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து உணவக ஊழியர்களிடம் கேட்டபோது, முதலில் அது நண்டின் மூட்டு பகுதியில் இருந்த அழுக்கு என சமையல்காரர் கூறியதாகவும், பின்னர் நண்டு காலைப் பரிசோதிக்க சமையலறைக்கு எடுத்துச் சென்றதாகவும் அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

நண்டு காலைப் பரிசோதித்த உணவகம், அதற்குப் பதிலாக புதிய நண்டு உணவு ஒன்றை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஆனால், வாடிக்கையாளர் ஏற்கனவே வயிறு நிறைந்துவிட்டதாகக் கூறி உணவை அங்கேயே சாப்பிட விரும்பவில்லை என்றும், மாற்று உணவை எடுத்துச் செல்லவோ அல்லது அந்த உணவின் கட்டணத்தை பில்லில் இருந்து கழிக்கவோ விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மேலாளர் சமையலறையில் பயன்படுத்தப்படும் கடல் உணவு சாஸ் ஒன்றைக் கொண்டு வந்து, நண்டு காலில் இருந்த பொருள் அதே சாஸ் என்று விளக்கியதாக வாடிக்கையாளர் கூறியுள்ளார். ஆனால், அந்த சாஸின் நிறத்துக்கும் நண்டு காலில் இருந்த பொருளுக்கும் வித்தியாசம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உணவகம் தெரிவித்ததாவது, அந்த உணவில் பயன்படுத்தப்பட்டது Mud Crab வகை நண்டு. நண்டு குழம்பில் வேகவைக்கப்படும்போது, அதில் பயன்படுத்தப்படும் கடல் உணவு சாஸ் நண்டின் ஓடு மற்றும் மூட்டு பகுதிகளில் தேங்கக்கூடும் என்று உணவகம் விளக்கியுள்ளது.

மேலும், நண்டு காலில் இருந்த பொருளை சமையல்காரர் அகற்றியது அது என்ன என்பதை பரிசோதிப்பதற்காகத்தான் என்றும், பின்னர் அது தங்களது உணவுக்கான சாஸ் என்பதை உறுதி செய்ததாகவும் உணவகம் கூறியுள்ளது.

இதற்கிடையில், அந்த வாடிக்கையாளர் செப்டம்பர் 15ஆம் தேதி Google Maps மதிப்புரையில் உணவகத்தின் விளக்கத்தை மறுத்துள்ளார்.

நண்டு துண்டுகள் ஏழு இருந்த நிலையில், தானும் தனது துணையும் ஐந்து துண்டுகள் மட்டுமே சாப்பிட்டதாகவும், நண்டு சூப் மற்றும் நூடுல்ஸை அதிகம் சாப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நண்டு காலில் இருந்த பொருளின் வாசனையும் சுவையும் உணவகம் கூறிய கடல் உணவு சாஸைப் போல இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவோ அல்லது இலவச உணவைப் பெறுவதற்காகவோ எழுப்பப்பட்ட புகார் அல்ல என்று வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
தனது முக்கிய நோக்கம், உணவு குறித்து எழுந்த சந்தேகத்திற்கு தெளிவான மற்றும் ஒரே மாதிரியான விளக்கம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை இருப்பதாகவும், புகார்களுக்கு உணவகங்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வாடிக்கையாளரின் சமீபத்திய கருத்துகளுக்கு உணவகம் இதுவரை பதிலளிக்கவில்லை.