சிங்கப்பூருக்குள் 5,476 மின்னணு சிகரெட்டுகள்..!! 50 பேரிடம் சிக்கிய அதிர்ச்சித் தகவல்!

சிங்கப்பூரின் அனைத்து விமான, கடல் மற்றும் தரைவழி சோதனைச் சாவடிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சட்டவிரோதமாக மின்னணு சிகரெட்டுகளைக் கொண்டு வந்தது தொடர்பாக 50 சம்பவங்களை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ICA) கண்டறிந்துள்ளது.
அக்டோபர் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனைகளில், 5,476-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களில் சுமார் 68 சதவீதம் குறுகிய காலப் பயணிகளுடன் தொடர்புடையவை என்றும், மீதமுள்ள 32 சதவீதம் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி வைத்திருப்பவர்களுடன் தொடர்புடையவை என்றும் ICA தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4-க்கு வந்த நான்கு வெளிநாட்டுப் பயணிகளின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,272 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பாகங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த நான்கு பயணிகளும் மேல்நடவடிக்கைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (HSA) ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள உள்ளனர்.
மின்னணு சிகரெட்டுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுக்க, விமானம், தரை மற்றும் கடல்வழி சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பையும் சோதனைகளையும் தொடர்ந்து தீவிரப்படுத்தப் போவதாக ICA தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் இங்கு வசிப்பவர்கள் அனைவரும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.
சட்டத்தை மீறும் குறுகிய காலப் பயணிகளுக்கு முதல் முறை அபராதம் விதிக்கப்படுவதுடன், மின்னணு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம். நீண்டகால அனுமதி வைத்திருப்பவர்கள் மூன்றாவது முறையாக விதிமீறினால், அவர்களது அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் நாட்டை விட்டு வெளியேற்றப்படவும், மீண்டும் நுழையத் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
