சிங்கப்பூர் பெண் மீது அமில வீச்சு..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட 19 வயது இளைஞர்!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி மீது ஹாங்காங்கில் அரிக்கும் திரவத்தை வீசிய வழக்கில், 19 வயது இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஏன்சன் கியூ (Anson Kew) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரிக்கும் திரவத்தை வீசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கான தண்டனை விவரங்கள் அக்டோபர் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஆண்ட்ரூ சான் ஹிங்-வாய் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, ஹாங்காங்கின் வான் சாய் பகுதியில் 36 வயதான ஜியாங் வென் என்ற சிங்கப்பூர் சுற்றுலாப் பயணி காரில் ஏற முயன்றபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
கருப்பு உடையும் முகமூடியும் அணிந்திருந்த இளைஞர், அந்தப் பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டது. பெண்ணின் முகம் மற்றும் கால்களில் ரசாயனத் தீக்காயங்கள் ஏற்பட்டன. கார் ஓட்டுநர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இருப்பினும், விசாரணையின்போது அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் தாக்குதலுக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே அவர் சம்பவம் நடைபெற்ற பகுதியை நோட்டமிட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்தத் தாக்குதலில் பெண்ணின் உடலில் சுமார் 10 விழுக்காட்டுப் பகுதியில் ரசாயனத் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவருக்கு அறுவை சிகிச்சை மற்றும் பல தோல் மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் திரும்பினார்.
இந்த வழக்கில் அக்டோபர் 29ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் கவனத்தைப் பெற்றுள்ளன.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
