சிங்கப்பூர் குடியிருப்பில் நடந்தது என்ன?சமையலறையில் பற்றிய தீ..!!

சிங்கப்பூர் குடியிருப்பில் நடந்தது என்ன?சமையலறையில் பற்றிய தீ..!!

சிங்கப்பூர் :சிங்கப்பூரின் யிஷுன் பகுதியில் உள்ள HDB குடியிருப்பின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பொதுமக்கள் தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (அக்டோபர் 20) இரவு சுமார் 9.25 மணியளவில், யிஷுன் ஸ்ட்ரீட் 42, பிளாக் 472B-இன் 11-வது மாடியில் உள்ள குடியிருப்பில் நிகழ்ந்தது. அங்குள்ள சமையலறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியதாக SCDF தெரிவித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த SCDF வீரர்கள், காயமடைந்த நான்கு பேருக்கும் முதலுதவி அளித்து அவர்களின் காயங்களைப் பரிசோதித்தனர்.
அவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு கவனிக்கப்படாத சமையல், மின்சாரக் கோளாறுகள் மற்றும் எரியும் பொருட்களைக் கவனிக்காமல் விடுவது ஆகியவை முக்கியக் காரணங்களாக இருப்பதாக SCDF தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, சமைக்கும்போது உணவை அடுப்பில் வைத்துவிட்டு கவனிக்காமல் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், எண்ணெய் மற்றும் கொழுப்புப் படிவங்கள் சேர்வதைத் தடுக்க அடுப்புகள், புகைபோக்கிகள் மற்றும் ஓவன்களைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.

மின்சாரச் சாக்கெட்டுகளில் அதிகப்படியான சாதனங்களை இணைத்து மின் சுமையை ஏற்படுத்துவதையும், மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, மின்னணு சாதனங்களை இரவு முழுவதும் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி மற்றும் சிகரெட் போன்ற எரியும் பொருட்களைப் பயன்படுத்தும்போது அவற்றைக் கவனிக்காமல் விட்டுச் செல்லக்கூடாது. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு முன்பு முழுமையாக அணைந்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.

சமையலறையில் சிறிய கவனக்குறைவுகூட பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், குடியிருப்பாளர்கள் தீப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.