பொருளை வாங்குவதாக நடித்து மோசடி..!! Carousell பயனர்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

பொருளை வாங்குவதாக நடித்து மோசடி..!! Carousell பயனர்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

சிங்கப்பூரில் இணையவழிப் பொருட்கள் விற்பனைத் தளமான Carousell மூலம் போலி வாங்குபவர்களால் நடத்தப்படும் இணைய மோசடிகளில், கடந்த ஜூலை மாதம் முதல் குறைந்தது 63 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் குறைந்தது S$180,000 இழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில், பொருட்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களைப் போல மோசடியாளர்கள் நடிக்கின்றனர். முதலில் Carousell தளத்தின் உரையாடல் வசதி அல்லது மின்னஞ்சல் மூலம் விற்பனையாளர்களைத் தொடர்புகொண்டு, பின்னர் WhatsApp அல்லது Telegram போன்ற பிற தகவல் பரிமாற்றத் தளங்களுக்கு உரையாடலை மாற்றுமாறு வலியுறுத்துகின்றனர்.

தொடர்ந்து, Carousell நிறுவனத்தின் உண்மையான ரசீது போன்ற தோற்றமளிக்கும் PDF கோப்பை அனுப்புகின்றனர். அதில் பணத்தைப் பெறுவதற்காகவோ அல்லது பரிவர்த்தனையை உறுதிப்படுத்துவதற்காகவோ பயன்படுத்த வேண்டும் எனக் கூறி, இணைய இணைப்புகள் மற்றும் QR குறியீடுகளை வழங்குகின்றனர்.

அவற்றை நம்பி இணைப்புகளைத் திறக்கும் அல்லது QR குறியீடுகளை வருடும் விற்பனையாளர்கள், Carousell தளத்தைப் போன்ற போலி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு பணத்தைப் பெற வங்கிக் கணக்கைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, வங்கித் தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.

பின்னர், வங்கியின் உண்மையான இணையதளம் போன்ற தோற்றமளிக்கும் போலி தளத்திற்கு விற்பனையாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு இணைய வங்கிக் கணக்கின் உள்நுழைவு விவரங்கள், வங்கி அட்டைத் தகவல்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) உள்ளிட்டவற்றை வழங்குமாறு கேட்கப்படுகிறது.

சிலரிடம் வங்கியின் பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்குமாறு கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் அல்லது வங்கி அட்டைகளிலிருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்படுவதுடன், வெளிநாட்டு வங்கி அட்டைகளுக்கும் பணம் மாற்றப்படலாம்.

இதற்கு முன்பு, Carousell தளத்தில் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்த ஆடவர் ஒருவர் இதேபோன்ற மோசடியில் சிக்கி, தனது வங்கிக் கணக்கிலிருந்து S$4,100-க்கும் அதிகமான தொகையை இழந்திருந்தார்.

விற்பனையாளர்கள் அல்லது வாங்குபவர்கள் WhatsApp, Telegram போன்ற வெளிப்புறத் தகவல் பரிமாற்றத் தளங்களுக்கு உரையாடலை மாற்றுமாறு கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறப்பதையும் QR குறியீடுகளை வருடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், பணம் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை Carousell நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணையதளம் மூலம் சரிபார்க்க வேண்டும். இணைய வங்கிப் பரிவர்த்தனை வரம்புகளை அமைத்தல், கூடுதல் பாதுகாப்பு உறுதிப்படுத்தலைச் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

மோசடியில் சிக்கியதாகச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு மோசடியான பரிவர்த்தனைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். சந்தேகங்கள் அல்லது உதவி தேவைப்பட்டால், சிங்கப்பூரின் 24 மணி நேர ScamShield உதவி எண்ணான 1799-ஐத் தொடர்புகொள்ளலாம்.