சிங்கப்பூரில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆடவர்..! பல மாதங்களாக யாருக்கும் தெரியாதது ஏன்?

சிங்கப்பூரில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆடவர்..! பல மாதங்களாக யாருக்கும் தெரியாதது ஏன்?

சிங்கப்பூரில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 62 வயது ஆடவர், வீட்டில் உயிரிழந்து பல மாதங்களுக்குப் பிறகு கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கோ மெங் ஹொக் (Koh Meng Hock) என்ற அந்தச் சிங்கப்பூர் ஆடவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச் சத்து உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் அவருக்குப் பக்கவாதமும் ஏற்பட்டிருந்தது.

2021ஆம் ஆண்டு பெடோக் பலதுறை மருந்தகத்தில் அவர் இறுதியாக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவரது ரத்த அழுத்தம் 226/137 என்ற மிக உயர்ந்த அளவில் இருந்தது. அப்போது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எடுத்துவந்த மருந்துகளைத் தாமாகவே நிறுத்திவிட்டதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லவும் மறுத்த அவர், பின்னர் திட்டமிட்டபடி மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லவில்லை.

அந்தக் குடியிருப்பில் வசித்த அண்டை வீட்டார், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். இதுகுறித்து குடியிருப்பு நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர்.

மார்ச் 31ஆம் தேதியும் துர்நாற்றம் அதிகரித்ததாகக் கூறி மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், அப்போது குடியிருப்பில் அசாதாரணமான எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி இரவு மீண்டும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியாளர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பூட்டு திறப்பவரின் உதவியுடன் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உடல் பல மாதங்களாக இருந்ததால், அதன் அடையாளத்தைக் கண்டறிவது சிரமமாக இருந்தது. இதையடுத்து, உயிரிழந்தவரின் சகோதரரிடம் பெறப்பட்ட ரத்த மாதிரியிலிருந்து கிடைத்த டிஎன்ஏ தகவலுடன் ஒப்பிட்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவ ஆய்வுகளின்படி, பிரேதப் பரிசோதனைக்கு முன்பாக இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. எனினும், உடலின் நிலை காரணமாக மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

வீட்டிற்குள் யாராவது அத்துமீறி நுழைந்ததற்கான அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை. மேலும், இந்தச் சம்பவத்தில் மற்றொருவர் தொடர்புடையதாகச் சந்தேகிக்க காவல்துறையிடம் ஆதாரம் இல்லை.

நீண்டகாலமாகக் கட்டுப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சினைகள் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணை அதிகாரி கருதினாலும், வேறு காரணங்களையும் முழுமையாக நிராகரிக்க முடியவில்லை. இதனால், மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான முடிவுக்கு வர இயலாத நிலையில், விசாரணை நீதிமன்றம் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.