காய்கறி லாரியில் மறைத்து வைக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட சிகரெட் அட்டைகள்..!! சிங்கப்பூரில் சிக்கியது எப்படி?

காய்கறி லாரியில் மறைத்து வைக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட சிகரெட் அட்டைகள்..!! சிங்கப்பூரில் சிக்கியது எப்படி?

சிங்கப்பூருக்குள் காய்கறிகளை ஏற்றிவந்த லாரியில், வரி செலுத்தப்படாத 800க்கும் மேற்பட்ட சிகரெட் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய மலேசிய ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த லாரி, அக்டோபர் 8ஆம் தேதி சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டுக்குள் நுழைந்தபோது அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

லாரியை ஸ்கேன் செய்தபோது, அதில் சந்தேகத்திற்குரிய அம்சங்கள் இருப்பதை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் (ICA) பட ஆய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, லாரியை விரிவாகச் சோதனையிடுமாறு சோதனைச் சாவடி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காய்கறிக் கூடைகளுக்குக் கீழே வெள்ளை நிறப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மொத்த எண்ணிக்கை 800க்கும் மேற்பட்ட அட்டைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை ஏற்றிவந்த லாரியில் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய மலேசிய ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளும் கைது செய்யப்பட்ட ஓட்டுநரும் மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், வர்த்தகம் மற்றும் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், நாட்டின் எல்லைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.