ஆன்லைன் விற்பனை ஆசையில் திருட்டில் இறங்கிய சகோதரிகள்... இறுதியில் நேர்ந்தது என்ன?

சிங்கப்பூரில் அழகுசாதனப் பொருட்களைக் கடைகளில் இருந்து திருடி, இணையத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டத் திட்டமிட்ட இரு சகோதரிகள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
27 வயதான யூனிஸ் மஷிரோவும் (Eunice Mashiro), அவரது 20 வயது தங்கையும் இணைந்து இந்தத் திருட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் இருந்து அழகுசாதனப் பொருட்களைத் திருடி, அவற்றை இணைய விற்பனைத் தளமான Carousell மூலம் விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
இதற்காக இருவரும் தனித்தனியாக Carousell கணக்குகளைத் தொடங்கினர். வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைத்ததும், 2024ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தங்களது திட்டத்தைச் செயல்படுத்தினர்.
திட்டத்தின்படி, தங்கை கடைக்குள் சென்று பொருட்களைத் திருடுவதும், அக்கா கடைக்கு வெளியே பயணப் பெட்டியுடன் காத்திருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதும் என முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று, கடையிலிருந்து சன்ஸ்கிரீன், வாசனைத் திரவியம், முகப்பூச்சு உள்ளிட்ட எட்டு அழகுசாதனப் பொருட்களைத் தங்கை திருடியுள்ளார். அவற்றின் மொத்த மதிப்பு S$1,324 எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கடைக்கு வெளியே காத்திருந்த அக்காவிடம் பொருட்களைக் கொடுத்து, பயணப் பெட்டிக்குள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும், கடையில் பொருட்கள் காணாமல் போனது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருவரின் திருட்டுச் செயலும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுதவிர, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை, பெண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்யும் இணைய விற்பனையாளரிடமும் யூனிஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாங்கிய ஆடைகள் கிடைக்கவில்லை எனப் பொய்யாகக் கூறி, மீண்டும் ஆடைகளை அனுப்புமாறும் பணத்தைத் திருப்பித் தருமாறும் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யூனிஸ் மீது திருட்டு மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் இரண்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 24 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை, அவரது தங்கை குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 15 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
