சிங்கப்பூரில் ஜப்பானிய சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! 4 ஆண்டுகளாகச் சேகரித்த போகிமான் அட்டைகள் மாயம்!

சிங்கப்பூரில் நடைபெற்ற போகிமான் அட்டை கண்காட்சியில், 15 வயது ஜப்பானிய சிறுவனின் சுமார் S$1,000 மதிப்புள்ள போகிமான் அட்டைகள் அடங்கிய பை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரின் பிஷான் பகுதியில் உள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணியளவில் போகிமான் அட்டை கண்காட்சி நடைபெற்றது.
அந்தக் கண்காட்சியில் கலந்துகொண்ட 15 வயது ஜப்பானிய சிறுவன், அங்கிருந்த விற்பனையாளர் ஒருவருடன் அட்டைகள் தொடர்பான விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தோளில் பையைச் சுமந்திருந்ததால் சோர்வடைந்த சிறுவன், தனது கருப்பு நிறத் தோள்பையைத் தரையில் வைத்துள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து வேறு அட்டைகளை வாங்குவதற்காக சுமார் மூன்று நிமிடங்கள் அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளார்.
மீண்டும் திரும்பி வந்தபோது, அவர் வைத்திருந்த பையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், உடனடியாகப் பையைத் தேடத் தொடங்கியுள்ளார்.
காணாமல் போன பைக்குள், சிறுவன் நான்காம் வகுப்புக்குப் பிறகு ஐந்தாம் வகுப்பு காலத்திலிருந்து சுமார் நான்கு ஆண்டுகளாகச் சேகரித்து வந்த போகிமான் அட்டைகள் அடங்கிய தொகுப்பு இருந்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் S$1,000 எனக் கூறப்படுகிறது.
மேலும், அந்தப் பையில் மாணவர் பயண அட்டை, தண்ணீர் போத்தல் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஆர்வத்துடன் சேகரித்து வந்த அட்டைகள் ஒரே நேரத்தில் காணாமல் போனது சிறுவனுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவான கண்காணிப்புக் காணொளியைச் சிறுவன் ஆய்வு செய்துள்ளார். அதில், தரையில் வைக்கப்பட்டிருந்த பையை ஒரு ஆணும் பெண்ணும் கவனிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் சைகை செய்து, அந்தப் பையை எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சிறுவன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பையின் அடையாளமாக அதில் இணைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற டோட்டோரோ சாவிக்கொத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார் சம்பவம் நடந்த உடனேயே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், கண்காணிப்புக் காணொளியில் சில பகுதிகள் தெளிவாகப் பதிவாகாததால், சந்தேகத்திற்குரிய அந்த ஆண் மற்றும் பெண்ணைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டதாகச் சிறுவன் தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த நபர்களைக் கண்டறிய முடியாததால் வழக்கு முடிக்கப்பட்டதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பையையும் பல ஆண்டுகளாகச் சேகரித்த அட்டைகளையும் மீட்டெடுக்கும் நம்பிக்கையில், சிறுவன் Instagram தளத்தில் தனியாக ஓர் கணக்கைத் தொடங்கியுள்ளார். அதில் சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து, அந்த நபர்களைப் பற்றித் தகவல் தெரிந்தவர்கள் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நவம்பர் 13ஆம் தேதி இரவு நிலவரப்படி, அந்தப் பதிவு 5.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 8,500க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றிருந்தது. மேலும், 400க்கும் அதிகமான கருத்துகளும் பதிவாகியிருந்தன.
பலர் சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவரது பொருட்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர் அதேவேளையில், விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பின்றித் தனியாக விட்டுச் சென்றது தவறு என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த சிறுவன், பையைத் தனியாக வைத்துவிட்டுச் சென்றது தனது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். தோளில் வலி ஏற்பட்டிருந்ததாலும், சில நிமிடங்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்ததாலும் பையைத் தரையில் வைத்ததாக விளக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினரிடம் புகார் கிடைத்துள்ளதாகச் சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஆசையுடன் சேகரித்த பொருட்களை இழந்த சிறுவன், அவற்றை மீண்டும் பெறுவதற்கான நம்பிக்கையில் பொதுமக்களின் உதவியை நாடி வருகிறார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
