சிங்கப்பூர் விளையாட்டு உலகில் பேரதிர்ச்சி..!! 24 வயது வீரரின் திடீர் மரணம்..!!

சிங்கப்பூர் விளையாட்டு உலகில் பேரதிர்ச்சி..!! 24 வயது வீரரின் திடீர் மரணம்..!!

சிங்கப்பூரின் தானா மெரா கடற்கரைச் சாலையில் சமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 24 வயது சைக்கிள் ஓட்டுநர், தேசிய டிரையத்லான் வீரரான ரஸ்ஸல் லீ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருந்த அவரது திடீர் மறைவு, சிங்கப்பூர் விளையாட்டு சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்ஸல் லீயின் மறைவுக்கு சிங்கப்பூர் டிரையத்லான் சங்கம், தேசிய அணியைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் டிரையத்லான் சங்கம், நவம்பர் 15ஆம் தேதி மாலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ரஸ்ஸல் லீயின் திடீர் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அவரது மறைவு உள்ளூர் விளையாட்டு சமூகத்தில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரஸ்ஸல் லீ கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்ட மாணவர்-விளையாட்டு வீரர் என்றும், தேசிய அணியின் அன்புக்குரிய உறுப்பினராகத் திகழ்ந்தவர் என்றும் சங்கம் புகழாரம் சூட்டியுள்ளது.

சிங்கப்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவர், தனது கனிவான குணம், பெருந்தன்மை மற்றும் மனவுறுதியால் சக வீரர்கள், நண்பர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக வீரர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஸ்ஸல் லீயின் குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பதுடன், அவருடன் பயிற்சி பெற்ற தேசிய அணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் மனரீதியான ஆதரவையும் வழங்குவதே தற்போதைய முதன்மையான முன்னுரிமை எனச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சாலை விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், தற்போது கூடுதல் விவரங்களை வெளியிட முடியாத நிலை இருப்பதாகவும் கூறியுள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் சக வீரர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து, அவர்கள் துயரத்தில் இருந்து மீளத் தேவையான அவகாசத்தை வழங்குமாறு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிடம் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், சாலையைப் பயன்படுத்தும் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் வழிவிட்டு, சைக்கிள் ஓட்டுநர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ரஸ்ஸல் லீக்கான நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான முடிவும் அவரது குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மதிப்பளித்தே எடுக்கப்படும் எனச் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஸ்ஸல் லீயின் மறைவு அவரது சக வீரர்களையும் நண்பர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய டிரையத்லான் வீராங்கனையான ஹெர்லீன் நடாஷா யூ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஸ்ஸல் லீக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் தனக்கே உரிய விதத்தில் கருணையையும் அன்பையும் வெளிப்படுத்திய தனித்துவமான மனிதர் ரஸ்ஸல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்து நிகழ்வதற்கு சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்புதான் இருவரும் சாலையின் குறுக்கே ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து கையசைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்திப்புதான் அவரை கடைசியாகப் பார்க்கும் தருணமாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை என அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு தேசிய டிரையத்லான் வீரரான நிக்கோலஸ் ரச்மாடியும் ரஸ்ஸல் லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டபோது தன்னால் நம்பவே முடியவில்லை என்றும், தனது நண்பர் உயிரிழந்துவிட்டார் என்ற உண்மையை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ஸல் லீ தனக்கு ஒரு சக வீரராகவும், போட்டியாளராகவும் மட்டுமின்றி, தனது சொந்தத் தம்பியைப் போன்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் மிகுந்த ஊக்கம் கொண்டவராக ரஸ்ஸல் திகழ்ந்தார். அதே நேரத்தில் அன்பும் நகைச்சுவை உணர்வும் நிறைந்த மனிதராகவும் இருந்தார். அவரது இந்தப் பண்புகள் தன்னை ஆழமாகப் பாதித்ததுடன், தொடர்ந்து ஊக்கமளித்ததாகவும் நிக்கோலஸ் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

24 வயதிலேயே தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் பயணித்து வந்த ரஸ்ஸல் லீயின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அவருடன் பயணித்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

“நீங்கள் இல்லாமல் இந்தப் பாதை இனி ஒருபோதும் முன்புபோல் இருக்காது. உங்களை நாங்கள் மிகவும் இழந்து தவிப்போம்” என்ற சக வீரரின் உருக்கமான வார்த்தைகள், ரஸ்ஸல் லீயின் இழப்பு ஏற்படுத்தியுள்ள வலியை வெளிப்படுத்துகின்றன.

இளம் வயதில் மறைந்தாலும், தனது உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அன்பான குணத்தால் பலரது மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள ரஸ்ஸல் லீக்கு விளையாட்டு சமூகத்தினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.