சிங்கப்பூரில் 23ஆவது மாடியில் பயங்கர தீ விபத்து..!! 140 பேர் வெளியேற்றம்..2 குழந்தைகள் பத்திரம்!

சிங்கப்பூரில் 23ஆவது மாடியில் பயங்கர தீ விபத்து..!! 140 பேர் வெளியேற்றம்..2 குழந்தைகள் பத்திரம்!

சிங்கப்பூரின் பூன் கெங் (Boon Keng) பகுதியில் உள்ள அடுக்குமாடி HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 140 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் புகையைச் சுவாசித்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 16ஆம் தேதி மாலை சுமார் 4:50 மணியளவில், Boon Keng Road, Block 8 என்ற முகவரியில் உள்ள 23ஆவது மாடி வீட்டின் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறையினரும் SCDF அதிகாரிகளும் இணைந்து அந்தக் குடியிருப்பிலிருந்து சுமார் 140 பேரை வெளியேற்றினர்.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர், தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். இருப்பினும், அவர் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ (Shawn Loh) தனது Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த எட்டு நிமிடங்களுக்குள் SCDF அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தின்போது வீட்டில் இருந்த குடியிருப்பாளர்கள் வலையமைப்பின் (Residents’ Network) தலைவி, தனது குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருடன் இணைந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவியுள்ளார். இதில் இரண்டு பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் Residents’ Network மையம் உடனடியாகத் திறக்கப்பட்டது.

மேலும், நகர மன்றம் மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கினர்.

தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்களின் விரைவான நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.