S$50,000 லஞ்சம் பெற்ற முன்னாள் திட்ட மேலாளர்..!! 8 மாதம் 2 வாரங்கள் சிறை.!

S$50,000 லஞ்சம் பெற்ற முன்னாள் திட்ட மேலாளர்..!! 8 மாதம் 2 வாரங்கள் சிறை.!

சிங்கப்பூரில் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்தின் நிர்வாக முகவர் நிறுவனத்தில் முன்னாள் திட்ட மேலாளராகப் பணியாற்றியவர், S$50,000 லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 8 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

56 வயதான Ng Yin Hong என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு லஞ்சக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். மற்றொரு குற்றச்சாட்டு தண்டனை விதிக்கும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

Ng Yin Hong, 1994ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை EM Services நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்திற்கான திட்ட மேலாளராகப் பொறுப்பு வகித்தார்.

தனது பணிக்காலத்தில் ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது வணிகத் தொடர்புடையவர்களிடமிருந்து எந்தவிதமான பரிசுகளையும் பணத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற நிறுவன விதிமுறைகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், Raymond Ng Choon Mong என்ற 61 வயதுடைய ஒப்பந்ததாரரிடம் தனது உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும், கண் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருப்பதாகவும், வேலையை இழக்க நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஒப்பந்ததாரர் அவரிடம் S$50,000 ரொக்கப் பணம் அடங்கிய பழுப்பு நிற உறையைக் கொடுத்துள்ளார். அது ஒரு சிறிய அன்பளிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த உறையைப் பெற்றுக்கொண்ட Ng Yin Hong, அதில் S$100 நோட்டுகளாக மொத்தம் S$50,000 இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

லஞ்சமாகப் பெற்ற S$50,000 தொகையில் S$12,500ஐத் தனது தனிப்பட்ட மற்றும் குடும்பச் செலவுகளுக்காக அவர் பயன்படுத்தியுள்ளார். மேலும், பணம் பெற்ற விவகாரத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், பெற்றுக்கொண்ட முழு S$50,000 தொகையையும் அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைத்துள்ளார்.

இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம், 41 HDB குடியிருப்புக் கட்டடங்களின் கூரைகளைப் புதுப்பிக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளியைக் கோரியிருந்தது.

இந்தப் பணிகளுக்கான S$3.3 மில்லியன் குறைந்தபட்ச ஒப்பந்தத் தொகையை Raymond Ng தொடர்புடைய Atlas Maintenance நிறுவனம் பெற்றது. அந்தப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தன. இதன் மூலம் நிறுவனத்துக்கு சுமார் S$332,000 முதல் S$499,800 வரை லாபம் கிடைத்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் Raymond Ng Choon Mong மற்றும் அவரது நிறுவனமான Atlas Maintenance மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களது வழக்கு இன்னும் விசாரணைக்கு வர வேண்டியுள்ளது.

தண்டனை தொடர்பான விசாரணையின்போது, தனது தவறு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளதாகவும், இனி இதுபோன்ற குற்றத்தைச் செய்யப்போவதில்லை என்றும் Ng Yin Hong தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், குழந்தைகள் இன்னும் படித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியும் இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறி, குறைந்த தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பொதுச் சேவை ஒப்பந்தங்கள் தொடர்பான லஞ்சக் குற்றங்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என அரசுத் தரப்பு வாதிட்டது. அவருக்கு 10 முதல் 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இறுதியில், S$50,000 லஞ்சம் பெற்ற முன்னாள் திட்ட மேலாளருக்கு 8 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் லஞ்சம் பெறும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை, S$100,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அரசு தொடர்பான ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிகபட்ச சிறைத் தண்டனை 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும்.