மோசடி வேலை என்று தெரிந்தும் கம்போடியா சென்ற சிங்கப்பூரர்..!! சிங்கப்பூர் திரும்பியதும் காத்திருந்த அதிர்ச்சி..!!

மோசடி வேலை என்று தெரிந்தும் கம்போடியா சென்ற சிங்கப்பூரர்..!! சிங்கப்பூர் திரும்பியதும் காத்திருந்த அதிர்ச்சி..!!

சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலில் சேர்வதற்காக கம்போடியா சென்ற சிங்கப்பூர் ஆடவருக்கு 14 மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Justin Chen Junxi என்ற அந்த ஆடவர், வேலை மோசடியுடன் தொடர்புடையது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் கம்போடியா சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை, அவருடைய நண்பர் ஒருவர் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில் வாடிக்கையாளர் சேவைப் பணி இருப்பதாகக் கூறி அவருக்கு வேலை வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த வேலை உண்மையில் தொலைபேசி மோசடியுடன் தொடர்புடையது என்பது புறப்படுவதற்கு முன்பே அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா சென்றடைந்த அவரை மோசடிக் கும்பல் தங்களது தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு சிங்கப்பூரர்களுக்குத் தொலைபேசி மூலம் மோசடி செய்ய வேண்டும் என்றும், ஏமாற்றிப் பெறப்படும் பணத்தில் 5 சதவீதம் கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் வங்கி ஊழியர்களைப் போல நடித்து, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் அனுமதியற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அவர்களை ஏமாற்றி வந்துள்ளனர். மேலும், சிங்கப்பூர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்வதற்காக சிங்கப்பூர் காவல்துறை சீருடைகளும், சட்ட அமைச்சு என்ற பெயர்ப் பலகையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

மோசடி அழைப்புகளை மேற்கொள்வதற்கான உரையாடல் குறிப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டன. சிங்கப்பூரர்களின் பெயர்கள், அடையாள அட்டை எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலையும் அவர் பார்த்துள்ளார்.

இருப்பினும், அந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட விரும்பாத அவர், கும்பலை விட்டு வெளியேற முடிவு செய்தார். பின்னர் தனது தாயாரின் உதவியுடன் சிங்கப்பூர் திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டை முன்பதிவு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி கம்போடியாவிலிருந்து புறப்பட்டார். மறுநாள் அதிகாலை சிங்கப்பூர் வந்தடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, அந்த மோசடிக் கும்பல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி வரை குறைந்தது 528 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் குறைந்தது S$52.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டும் சுமார் S$11.8 மில்லியனை இழந்துள்ளனர்.

சிங்கப்பூர் காவல்துறையும் கம்போடியக் காவல்துறையும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் மோசடி அழைப்புகளை நேரடியாக மேற்கொள்ளவில்லை என்றும், கும்பலிலிருந்து தானாகவே வெளியேறினார் என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். இதனை நீதிபதி கருத்தில் கொண்டபோதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராக இருந்த குற்றத்திற்காக அவருக்கு 14 மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.

இந்த வழக்கில் அவருக்கு வேலை அறிமுகப்படுத்திய நண்பர் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.