சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளர்களுக்கு 15% சொத்து வரி தள்ளுபடி..!! 2027-ல் அமலுக்கு வரும் புதிய சலுகை!!

சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளர்களுக்கு 15% சொத்து வரி தள்ளுபடி..!! 2027-ல் அமலுக்கு வரும் புதிய சலுகை!!

சிங்கப்பூரில் சொந்தமாக வீடுகளில் வசிக்கும் உரிமையாளர்களுக்கு அடுத்த ஆண்டு (2027) ஒருமுறை வழங்கப்படும் சொத்து வரித் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, HDB குடியிருப்புகளில் சொந்தமாக வசிப்பவர்களுக்கு 15% சொத்து வரித் தள்ளுபடியும், தனியார் வீடுகளில் சொந்தமாக வசிப்பவர்களுக்கு 10% வரித் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், தனியார் வீடுகளுக்கான தள்ளுபடி அதிகபட்சமாக 100 சிங்கப்பூர் டாலர் வரை மட்டுமே வழங்கப்படும்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், சிங்கப்பூர் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் நிதி அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வருவாய்த் துறை (IRAS) இன்று (நவம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளன.

சொந்தமாக வசிக்கும் HDB குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு 15% சொத்து வரித் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மூன்று அறைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட HDB வீடுகளில் வசிப்பவர்கள், வரிச் சலுகைகளைக் கணக்கில் எடுத்த பிறகு, மாதத்திற்கு சராசரியாக 2 முதல் 4 சிங்கப்பூர் டாலர் வரை மட்டுமே கூடுதலாக சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும், ஒன்று மற்றும் இரண்டு அறை HDB குடியிருப்புகளைச் சொந்தமாக வைத்திருக்கும் உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் குடியிருப்புகளில் சொந்தமாக வசிப்பவர்களுக்கும் அரசு வரிச் சலுகை அறிவித்துள்ளது. அவர்களுக்கு 10% சொத்து வரித் தள்ளுபடி வழங்கப்படும். இந்தத் தள்ளுபடியின் அதிகபட்ச வரம்பு 100 சிங்கப்பூர் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைக் கழித்த பிறகு, தனியார் வீடுகளில் சொந்தமாக வசிக்கும் பெரும்பாலான உரிமையாளர்கள் மாதத்திற்கு சராசரியாக 6 சிங்கப்பூர் டாலர் கூடுதலாக சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் அடுத்த மாதம் முதல், 2027ஆம் ஆண்டுக்கான சொத்து வரி ரசீதுகளைப் பெறத் தொடங்குவார்கள். இந்த வரிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி தேதி 2027ஆம் ஆண்டு ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் அன்றாடச் செலவுகளுக்கு மத்தியில், வீட்டு உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த ஒருமுறை வரித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் HDB மற்றும் தனியார் வீடுகளில் சொந்தமாக வசிக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.