நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்...!!!
சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு கலாச்சார குழுக்களிடையே இணக்கமான சகவாழ்வை ஊக்குவிப்பதில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்திய நபர்களை அங்கீகரிக்க, டெமாசெக் அறக்கட்டளை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான 5P குளோபல் இயக்கம் இணைந்து, புதிய “பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் விருதை” நிறுவியுள்ளன.
இந்த விருது, தென்கிழக்கு ஆசியா முழுவதும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் முதல் பிராந்திய விருதாகும்.
விருது குறிக்கோளாக:
🔶️ சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துதல்,
🔶️ பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் வலையமைப்பை நிறுவுதல்,
🔶️ பிராந்திய கலாச்சார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பவையும் அடங்கும்.
விருதின் புரவலரும் சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதியுமான ஹலிமா யாக்கோப்,புதிய விருதை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு, “சமூக நல்லிணக்கம் என்பது எல்லா மக்களாலும் ஒன்றாக கட்டியெழுப்ப வேண்டிய, வளர்க்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றார்.
வெற்றியாளருக்கு S$20,000 பரிசுத்தொகை, ஒரு நினைவு கோப்பை மற்றும் பிராந்திய விழாவில் தங்கள் திட்டத்தை வழங்கும் வாய்ப்பு வழங்கப்படும். பரிந்துரைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை திறந்திருக்கும்.