சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் (URA) இன்று (18.09.25)டெவலப்பர்கள் ஏலம் எடுப்பதற்காக பெடோக் பகுதியில் இரண்டு முக்கிய குடியிருப்பு திட்டங்களை தொடங்கியுள்ளது. இந்தத் தளங்கள் இரண்டும் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக URA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது தளம் பெடோக் ரைஸ் பகுதியில், கிழக்கு-மேற்கு பாதையில் தனா மேரா MRT நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தளம், சுமார் 380 குடியிருப்பு அலகுகளை அமைக்கக் கூடிய வசதியைக் கொண்டதாகும். இத்தளத்திற்கான டெண்டர் இந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி நண்பகலில் முடிவடையும் என்று URA தெரிவித்துள்ளது.
இரண்டாவது தளம் கிராஸ் ஸ்ட்ரீட் பகுதியில், டவுன்டவுன் பாதையில் டெலோக் அயர் எம்ஆர்டி நிலையம் அருகே அமைந்துள்ளது. இது சுமார் 2,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதுடன், கலப்பு-பயன்பாட்டு தளமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு தரை தளத்தில் வணிக வசதிகளும், மேல்தளங்களில் சுமார் 315 சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகளும் அமைக்கப்பட உள்ளன.
இந்த இரண்டு தளங்களும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்கத்தின் நில விற்பனை திட்டத்தின் கீழ் டெவலப்பர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவுள்ளன.