வைரலாகும் லீ சியென் லூங்கின் இன்ஸ்டாகிராம் பதிவு...!!!
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில் பிலிம் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட காணொளி மற்றும் படங்கள் அனைத்தும் SOOC என குறிப்பிடப்பட்டுள்ளன.அதாவது எந்த பிந்தைய திருத்தமும் இன்றி கேமராவிலிருந்து நேரடியாக பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
பிலிம் புகைப்படக் கலையில் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானது என்றும், படம் உருவாகும் வரை அதன் முடிவு எப்படியிருக்கும் என்பதை அறிய முடியாததே அதன் தனிச்சிறப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் ஒவ்வொரு முறையும் ஷட்டரை அழுத்தும் முன் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.இது வேகத்தை குறைத்து அந்த தருணத்தை ரசிக்க உதவுகிறது என்றும் அவர் எழுதினார்.
படப்பிடிப்பின்போது மக்களுடன் உரையாடுவது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்ததாகவும் லீ சியென் லூங் தெரிவித்தார். அவர் எடுத்த புகைப்படங்களில், தெருவிளக்குகள், நாற்காலிகளில் ஓய்வெடுக்கும் மக்கள், சாலையில் வானத்தை பிரதிபலிக்கும் நீர்த்துளைகள் போன்ற அன்றாடக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெயில் நிறைந்த சூழலில் எடுக்கப்பட்ட இந்த படங்கள், நிதானமான மற்றும் சூடான உணர்வை வெளிப்படுத்துகின்றன.
பதிவின் முடிவில், பிலிம் புகைப்படக்கலையை விரும்புபவர்கள் தங்களது அனுபவங்களையும் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அவரது இந்த பதிவுக்கு இதுவரை 24,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ள நிலையில், பலரும் அவரது எளிமையான காட்சிப்பதிவு மற்றும் கலைப்பார்வையை பாராட்டி கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.