உயிருக்கு போராடிய நபருக்கு உதவிய பெண்ணின் செயல் வைரல்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தெம்பனிஸ் MRT நிலையம் அருகே நேற்று (19.12.25) மாலை சுமார் 5:55 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று நடந்தது.
இச்சம்பவத்தில் தரையில் இரத்தக் கறைகளை கவனித்த கருணை உள்ளம் கொண்ட பெண் ஒருவர், காயமடைந்த நபரைக் கண்டுபிடித்து உடனடியாக 995-க்கு அழைப்பு விடுத்து, ஆம்புலன்ஸ் வரும் வரை முழு நேரமும் அவருக்கு உதவினார்.
காயமடைந்த நபர், முன்பு நடந்த வாக்குவாதத்துக்குப் பிறகு, தனக்கு அறிமுகமான ஒருவரால் முதுகில் குத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சிறிய காயம் போலத் தோன்றினாலும், பின்னர் அவரது முதுகில் பெரும் இரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது.
அவர் போலீசாரை அழைக்க வேண்டாம் எனக் கேட்டாலும், அந்த பெண் தொடர்ந்து உதவி செய்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார். போலீசார் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த நபருக்கு முதலுதவி அளித்து, சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையைத் தொடர்ந்து,53 வயது நபர் ஒருவர் ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தில், காயமடைந்த நபருக்கு துணையாக நின்ற அந்த பெண்ணின் கருணையும் துணிச்சலும் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.