சிங்கப்பூரில் இந்திய–ஜப்பான் வர்த்தகத்துக்கு புதிய பாலம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரிலுள்ள 5,200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்களுக்கும் ஆயிரக்கணக்கான இந்திய வர்த்தகங்களுக்கும் இடையேயான கூட்டு முயற்சிகளை மேலும் எளிதாக்கும் நோக்கில், ‘KCCS–Nippon Private Limited’ என்ற புதிய நிறுவனம் 2026 முதல் காலாண்டில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிறுவனத்தின் முன்னேற்பாடுகளை KCCS India Private Limited நிறுவனரும் தோக்கியோ தமிழ்ச் சங்க உயர்நிலைக் குழு உறுப்பினருமான கருணாநிதி காசிநாதன் தொடங்கி வைத்துள்ளார்.ஜப்பானிய முதலீடுகளை சிங்கப்பூர் வழியாக இந்தியர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய இலக்காகும்.
புதிய நிறுவனம், சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக மற்றும் தொழிற்சபையுடன் இணைந்து செயல்படவுள்ளது. ஜப்பானிய முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் இந்திய–ஜப்பான் கூட்டாண்மைகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானியர்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தது 51 விழுக்காடு பங்குகளை வழங்கினால், ஜப்பான் அனைத்துலக ஒத்துழைப்புக்கான வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி, இந்திய இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, இருநாட்டு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.