‘வோர்ல்ட் லெகசி’ கப்பல் பயணம் ரத்து – பின்னணி காரணம்?
சிங்கப்பூர்: விடுமுறையை சொகுசுக் கப்பல் பயணத்தில் கழிக்கலாம் என குடும்பத்துடன் ஆவலுடன் காத்திருந்த பல பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ‘வோர்ல்ட் லெகசி’ (World Legacy) என்ற சொகுசுக் கப்பலில் டிசம்பர் 19 முதல் பயணிக்க பலர் முன்பதிவு செய்திருந்த நிலையில், பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கப்பலை நிர்வகிக்கும் ‘வோர்ல்ட் குரூசஸ்’ நிறுவனம், டிசம்பர் 18 முதல் ஹார்பர் ஃபிரன்டில் உள்ள சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையத்திலிருந்து பயணங்கள் தொடங்கும் என விளம்பரப்படுத்தியிருந்தது. வழக்கமான கப்பல் பயணங்களைப் போல தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சில மணி நேரங்கள் மட்டுமே பயணம் செய்து கப்பலில் உள்ள வசதிகளை அனுபவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் 17 அன்று மாலை பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக பல பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டது. செலுத்திய கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் என்றும், ஏற்பட்ட சிரமத்திற்கு ஈடாக மாற்றுக் கப்பல் பயணத்துக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பற்றுச்சீட்டுகளை 12 மாதங்களுக்குள் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சில பயணிகள், அவர்கள் செலுத்திய கட்டணங்கள் ‘டிராகன் குரூஸ்’ என்ற பெயரில் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர். முன்பதிவுகளுக்கான தொடர்பு பணிகளை ‘டிராகன் குரூஸ்’ நிறுவனம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் பலர், ‘வோர்ல்ட் குரூசஸ்’ நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த வோர்ல்ட் குரூசஸ் நிறுவனம், நடைமுறை காரணங்களால் டிசம்பர் 17 முதல் 22 வரை பயணங்கள் மாற்றப்பட்டதாகவும், டிசம்பர் 23 முதல் மீண்டும் பயணங்கள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.