பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!!

பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) ஆராய்ச்சியாளர்கள் பெருமூளை மலேரியாவிற்கான சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் குறிப்பான்களை அடையாளம் கண்டுள்ளனர். உலகின் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த நோயை எதிர்கொள்ளும் முயற்சியில், இந்த ஆய்வு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, மலேரியா ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் உயிர்களை காவு வாங்குகிறது. சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை கிடைக்காத பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகின்றன. மலேரியாவின் மிகவும் ஆபத்தான வகையான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம், பெருமூளை மலேரியா உட்பட கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, NUS-இன் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், மெத்திலீன் நீல கலவை மலேரியா தொற்றால் மூளையில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து மலிவானதும், எளிதில் கிடைக்கக்கூடியதும் என்பதால், எதிர்கால சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது இரத்த குறிப்பான்களின் தொகுப்பையும் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மூலம், பெருமூளை மலேரியாவை விரைவாக கண்டறியவும், நோயின் தீவிரத்தைக் கணிக்கவும், நோயாளியின் மீட்சியை கண்காணிக்கவும் உதவும் ஒரே, தரப்படுத்தப்பட்ட இரத்த பரிசோதனையை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெருமூளை மலேரியாவிற்கான விரைவான மற்றும் நம்பகமான இரத்த பரிசோதனையை உருவாக்குவதும், மெத்திலீன் நீலத்தை ஒரு மலிவு துணை சிகிச்சையாக மதிப்பிடுவதும் தான் இந்த ஆராய்ச்சியின் நீண்டகால நோக்கமாக இருப்பதாக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK