ரவி இறப்புக்கு முன் நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மறைந்த முன்னாள் வழக்கறிஞர் எம். ரவியின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவியுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தயதாக 40 வயதான ஷான் லூ ஷி ஜியான் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, கடந்த 24ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை, பூன் கெங் சாலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பிரிவில், வகுப்பு A கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான மெத்தம்பேட்டமைனை பயன்படுத்த ரவியை சந்திக்க பிரதிவாதி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில்,பிரதிவாதியும் ரவியும் 2023ஆம் ஆண்டு சமூக ஊடக செயலி மூலம் அறிமுகமானவர்கள் என காவல்துறையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் தெரிவித்துள்ளன.
சம்பவத்தன்று,போதைப்பொருள் பயன்படுத்திய பின்னர் ரவி அசாதாரணமாக நடந்து கொண்டதாகவும், பின்னர் அவர் பதிலளிக்காமல் போனதாகவும் பிரதிவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து ரவிக்கு CPR வழங்கியதுடன், சிவில் பாதுகாப்புப் படைக்கு தகவல் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
56 வயதான ரவி, கோமா நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த மரணத்தில் கொலை குற்றம் இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும், முழுமையான உடற்கூராய்வு முடிவுகள் வெளியான பிறகே இறுதி விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது காவலில் உள்ள பிரதிவாதி, காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகாதார அறிவியல் ஆணையத்தின் பரிசோதனை முடிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை அரசு தரப்பு காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பிரதிவாதி மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் பிரதிவாதிக்கு S$20,000 க்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.அவர் அடுத்த சில நாட்களில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.