வெளிநாட்டில் கிடைத்த அன்பு…!!
மா யான்கிங்கை நெகிழ வைத்த சம்பவம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர், போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மா யான்கிங், பண்டிகை விடுமுறைக்காக பிரான்சில் பயணம் செய்தபோது எதிர்பாராத ஒரு அனுபவத்தை சந்தித்துள்ளார்.
அவர் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் போது தனது வேலட் தொலைந்ததை அறியாமல், அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்றுள்ளார். உணவகத்தில் காத்திருந்த வேளையில், ஒரு பெண்மணி அவரை அணுகி, அவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவரா என்றும் அரசுத் துறையில் பணியாற்றுகிறாரா என்றும் கேட்டுள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்த மா யான்கிங், அந்தப் பெண் சிங்கப்பூரில் முன்பு வசித்து வந்தவர் என்பதையும், தனது வேலட்டை அவர் கண்டுபிடித்திருப்பதையும் பின்னர் அறிந்தார்.
வேலட்டில் இருந்த வணிக அட்டையின் மூலம் உரிமையாளரை அடையாளம் கண்ட அந்தப் பெண்மணி, அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், உரிமையாளரை நேரில் கண்டுபிடிக்க முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.பின்னர் மா யான்கிங் காவல் நிலையத்திற்குச் சென்று தனது வேலட்டை மீட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த மா யான்கிங், வெளிநாட்டில் கிடைத்த இந்த மனிதநேய செயல் தனது கிறிஸ்துமஸை மேலும் இனிமையானதாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வாழ்ந்த அந்தப் பெண்மணியின் அன்பும் நேர்மையும் தனது பயணத்தின் மிக அழகான நினைவாக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.