குடிபோதையில் தன்னிலை மறந்த முன்னாள் ராணுவ கேப்டன்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் தனியார் வாடகை காரில் வாந்தி எடுத்து, பின்னர் ஓட்டுநரின் கழுத்தை நெரித்து தாக்கிய முன்னாள் ஆயுதப்படை கேப்டன் ஒருவருக்கு ஐந்து வார சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான ஆஷ்டன் ஜூட் ஜோசப், சம்பவ நேரத்தில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் கேப்டனாக பணியாற்றி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் ஆயுதப்படையிலிருந்து விலகியுள்ளார். இந்த வழக்கில் அவர் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பின்படி, சம்பவத்திற்கு முந்தைய இரவு நண்பர்களுடன் வெளியே சென்ற பிரதிவாதி, ஆறு முதல் ஏழு பைண்ட் பீர் குடித்துள்ளார். பின்னர் அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு செல்ல தனியார் வாடகை காரை அழைத்துள்ளார். பயணத்தின் போது அவருக்கு வாந்தி உணர்வு ஏற்பட்டாலும், வாகனத்தை நிறுத்த ஓட்டுநர் கூறிய ஆலோசனையை அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்தபின், காரில் வாந்தி எடுத்திருப்பதை ஓட்டுநர் கண்டறிந்து புகார் தெரிவித்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, ஓட்டுநர் பின் இருக்கையை சரிசெய்ய குனிந்த நேரத்தில், பிரதிவாதி பின்னால் இருந்து வந்து அவரது கழுத்தைப் பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது.
மூச்சு விட முடியாமல் தவித்த ஓட்டுநரின் அலறலைக் கேட்ட வழிப்போக்கர்கள் உதவிக்கு வந்ததைத் தொடர்ந்து, பிரதிவாதி தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் தடுமாறி விழுந்ததால் அவர் பிடிபட்டார். இந்த தாக்குதல் சம்பவம் அருகிலுள்ள HDB கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வழக்கின் போது, பிரதிவாதி மன்னிப்பு கோரி, ஓட்டுநருக்கு இழப்பீடு வழங்க முன்வந்தார். இருப்பினும், குடிபோதையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநரை தாக்கியது கடுமையான குற்றம் என நீதிபதி தெரிவித்தார். சமூக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வார சிறைத்தண்டனை அவசியம் எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.