Juice குடிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி..!! ஆரஞ்சுச் சாறு இயந்திரத்திற்குள் பல்லி!

சிங்கப்பூர்: ஆரஞ்சுச் சாறு விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரத்திற்குள் பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம், சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள Facebook குழுவான ‘Complaint Singapore’ பக்கத்தில், ஆரஞ்சுச் சாறு விற்பனை இயந்திரத்திற்குள் பல்லி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இயந்திரத்தின் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய iJooz நிறுவனம், சம்பவம் தொடர்பான இயந்திரம் புக்கிட் பஞ்சாங் பகுதியில் உள்ள Wenjing Court குடியிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, நவம்பர் 15ஆம் தேதி நிறுவன ஊழியர்கள் அந்த இயந்திரத்தை முழுமையாகச் சுத்தம் செய்து கிருமிநாசினி மூலம் சுத்திகரித்தனர். மேலும், விசாரணை முடியும் வரை அந்த இயந்திரத்தின் செயல்பாடும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இயந்திரத்தின் கதவு சரியாக மூடப்பட்டால், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக இயந்திரத்தின் கதவு மற்றும் அதன் சீல் அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இயந்திரத்தின் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இயந்திரத்தின் கதவு, பராமரிப்புப் பகுதிகள் மற்றும் பூச்சிகள் நுழையக்கூடிய இடங்கள் உள்ளிட்டவை கூடுதல் கவனத்துடன் பரிசோதிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஊழியர்கள் இயந்திரத்தைச் சுத்தம் செய்து பராமரித்த பிறகு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் அவற்றைப் பதிவு செய்யவும் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விசாரணை முழுமையாக முடிவடைந்து, தேவையான சுகாதார மற்றும் செயல்பாட்டுப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே சம்பந்தப்பட்ட இயந்திரம் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
