பரபரப்பு..!!!புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!!
சிங்கப்பூர்:புக்கிட் தீமாவில் உள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று காலை (21.12.25) சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
காவல்துறை வெளியிட்ட தகவலின்படி,620 அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள தேவாலயத்தில் காலை 7.10 மணியளவில் சந்தேகப் பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதி முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தேவாலய வளாகத்திற்குள் காலை 9.00 மணியளவில் அங்கு சென்றபோது,யாரும் அனுமதிக்கப்படவில்லை.அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தேவாலய தொண்டூழியர்கள் காணப்பட்டனர்.அவர்கள் அங்கு வந்திருந்தவர்களுக்கு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் ஆஃப் தி ஏஞ்சல்ஸ் தேவாலயத்திற்கு மக்கள் செல்லுமாறு தொண்டூழியர்கள் வழிநடத்தினர். காலை 9.17 மணியளவில் காவல்துறையின் கே-9 பிரிவு வாகனங்களும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் வாகனங்களும் தேவாலய வளாகத்திற்குள் நுழைந்தன.
இதற்கிடையில்,தேவாலய உறுப்பினர்களிடையே பகிரப்பட்ட தகவல்களில், தேவாலயத்தின் பின்புற பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.