இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..!

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 27 வயதில் அரிய மூளை நோயால் உயிரிழந்த நேதனியேல் ஸக்கரியா டான், தனது உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரது மறைவுக்கு ஓராண்டுக்குப் பிறகு, உறுப்புத் தானத்தின் மூலம் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய நன்றி கடிதத்தை அவரது தாயார் குயினி டான் பெற்றுள்ளார்.

நேதனியேல் உயிரிழப்பதற்கு முன்பாக தனது உறுப்புகளைத் தானம் செய்ய விரும்புவதாக தனது நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தின்படி, அவரது கல்லீரலும் சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டன.

அவரது கல்லீரல், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 64 வயது ஆடவருக்குப் பொருத்தப்பட்டது. அவரது சிறுநீரகங்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 52 மற்றும் 35 வயதுடைய இரு பெண்களுக்கு பொருத்தப்பட்டன.

அந்த இரு பெண்களில் ஒருவர் மூன்று ஆண்டுகளாகவும், மற்றொருவர் 10 ஆண்டுகளாகவும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆரோக்கியமாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.

மேலும், நேதனியேலின் இடுப்பு இரத்த நாளங்கள் எதிர்கால கல்லீரல் அறுவை சிகிச்சைகளுக்காகப் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய உறுப்பு தானத்தால் பயனடைந்தவர்களின் விவரங்களை அறிந்தது தாயார் குயினிக்கு ஆறுதலை அளித்துள்ளது. தனது மகனின் ஒரு பகுதி இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


மகனின் நினைவாக உட்லண்ட்ஸ் மெமோரியலில் உள்ள அவரது நினைவிடத்தில் காகிதத்தில் மடிக்கப்பட்ட விண்மீன்கள் அடங்கிய பாட்டில், சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை அவர் வைத்தார்.

அதில் நேதனியேலின் வயதைக் குறிக்கும் வகையில் 27 காகித விண்மீன்களை வைத்து தனது மகனுக்கு அஞ்சலி செலுத்தினார். மகனை இழந்த துயரத்திலும், அவரது உறுப்புகள் மூலம் மூன்று பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்திருப்பது குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.