இணையத்தில் கசிந்த "Avatar The Last Airbender "..!! 26 வயது நபர் மீது நடவடிக்கை..!!
சிங்கப்பூர் : அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் (AvatarThe Last Airbender) என்ற அனிமேஷன் திரைப்படத்தின் காட்சிகள் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளது.
திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தக் குற்றத்திற்காக 26 வயது நபரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த தகவலை நேற்று (ஏப்ரல் 24) காவல்துறை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபர் உள்ளடக்க ஊடக சேவையகம் ஒன்றில் முறையற்ற வகையில் நுழைந்து, வெளியாகாத அந்த திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.
பின்னர் அதன் சிலக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்த புகார் காவல்துறைக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டதை அடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இது குறித்த தீவிர விசாரணை நடத்தினர்.
புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த 26 வயதானவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மீது இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக, 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், $50,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
திரைப்படம் அக்டோபர் 2026 இல் வெளியாக இருந்த நிலையில் அதன் காட்சிகள் முன்கூட்டியே கசிந்தது குறிப்பிடத்தக்கது. Paramount + தளத்தில் வெளியாக இருந்த இந்த அனிமேஷன் திரைப்படத்தின் கசிவு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.