சிங்கப்பூர் ஓட்டுநர்களே உஷார்..! சாதாரண கார்களிலும் ரகசிய ரோந்து செல்லும் போக்குவரத்துக் காவல்துறை!

சிங்கப்பூர் ஓட்டுநர்களே உஷார்..! சாதாரண கார்களிலும் ரகசிய ரோந்து செல்லும் போக்குவரத்துக் காவல்துறை!

சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க, அடையாளங்கள் இல்லாத சாதாரண கார்களையும் போக்குவரத்துக் காவல்துறை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. பான் ஐலண்ட் விரைவுச்சாலையில் (PIE) சாதாரண கார் ஒன்று சரக்கு வாகனத்தை வழிமறித்த சம்பவம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்டோபர் 11ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், பான் ஐலண்ட் விரைவுச்சாலையில் போக்குவரத்துக் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாதுகாப்புப் பட்டை அணியாமல் வாகனம் ஓட்டிய 31 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் காவல்துறையினரின் கவனத்திற்குச் சிக்கினார். அவருக்கு 150 சிங்கப்பூர் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதுடன், மூன்று குற்றப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவியது. அதில், வெளிப்படையான காவல்துறை அடையாளங்கள் இல்லாத கருப்பு நிறக் கார், எச்சரிக்கை விளக்குகளை ஒளிரச் செய்து சரக்கு வாகனத்தை நிறுத்துவது காணப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், அடையாளங்கள் கொண்ட காவல்துறை வாகனங்களும் அடையாளங்கள் இல்லாத வாகனங்களும் பயன்படுத்தப்படுவதாகச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், காணொளியில் இடம்பெற்ற கருப்பு நிறக் கார் போக்குவரத்துக் காவல்துறைக்குச் சொந்தமானதா என்பதை காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.

சிங்கப்பூரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, சாலையில் காவல்துறை வாகனங்கள் தென்படும்போது மட்டுமல்லாமல், எப்போதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது அவசியம்.