சிங்கப்பூரில் சுகாதார காப்பீட்டில் பெரிய மாற்றம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரிய மாற்றம் வரவிருக்கிறது. புதிய விதிமுறைகளின் கீழ், காப்பீட்டு நிறுவனங்கள் விற்கும் துணை காப்பீட்டுகளில் (Rider Plans) குறைந்தபட்ச செலவுத் தொகை (Deductible) நீக்கப்படும். அதேசமயம் இணை-கட்டண (Co-payment) வரம்பு இரட்டிப்பாக்கப்படும். இதனால் காப்பீட்டு பிரீமியங்கள் சராசரியாக 30% வரை குறையும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது சிங்கப்பூரர்களில் 70% க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியுள்ளார்கள். அதில் 67% பேர் துணை காப்பீட்டுகளையும் வாங்கியுள்ளனர். இது மருத்துவமனைகளில், குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில், செலவுகளை குறைக்கும் உதவியாக இருந்தாலும், அதிகப்படியான மருத்துவ கோரிக்கைகளால் பிரீமியம் உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
தரவு படி, தனியார் மருத்துவமனை காப்பீட்டாளர்கள் மற்றவர்களை விட 1.4 மடங்கு அதிக கோரிக்கைகளைச் செய்கிறார்கள். மேலும் அவர்களின் சராசரி கோரிக்கை தொகையும் 1.4 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால்தான் அரசு புதிய விதிகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்தபட்ச செலவில்லாத துணை காப்பீட்டுத் திட்டங்களை தொடங்க வேண்டும்.மேலும் இணை-கட்டண வரம்பு S$3,000 இலிருந்து S$6,000 ஆக உயர்த்தப்படும்.
இதனால் தனியார் மருத்துவமனை துணை காப்பீட்டின் வருடாந்திர பிரீமியம் சுமார் S$600 வெள்ளி வரை குறையும்.பொது மருத்துவமனை காப்பீட்டுக்கான பிரீமியமும் சுமார் S$200 வெள்ளி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் 2026 ஏப்ரல் 1 க்குள் புதிய விதிமுறைகளுடன் இணங்க வேண்டும்.மேலும் தற்போதைய கொள்கைகள் அடுத்த புதுப்பிப்புக்கு முன் மாற்றப்படும். சுகாதார அமைச்சகம் கூறுகையில், இந்த மாற்றம் காப்பீட்டுத் தவணைகளின் உயர்வை கட்டுப்படுத்தவும், சுகாதார அமைப்பின் நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் உதவும்.