பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!!

பிறக்கும்போதே 40% தோல் இல்லை...! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!!

சிங்கப்பூரில் பிறக்கும்போதே தோல் இன்றி பிறந்த சிறுமிக்கு அவரது சொந்த திசுக்களைக் கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட தோலைப் பொறுத்தி, சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) மருத்துவர்கள் மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்த சுமாயாவுக்கு, உடலின் கிட்டத்தட்ட 40% தோல் இல்லை. அவரது தலை உடல் கைகள் மற்றும் கால்களில் தோல் அற்ற ஒரு சவ்வுப் படலம் மட்டுமே இருந்தது. இது அப்லசியா கியூடிஸ் கன்ஜெனிட்டா(Aplasia Cutis Congetia) எனப்படும் அரிதான பிறவிக் குறைபாடாகும்.

அதன் வழியாக அவரது உள் உறுப்புகளும் ரத்த நாளங்களும் வெளியில் தெரிந்தன. இது 10,000 பிறப்புகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் ஆபத்தான குறைபாடு ஆகும்.

பொதுவாக பலத்த தீக்காயம் அடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போல சுமாயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது மூளை மற்றும் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்க உடனடியாக தோல் மூடி தேவைப்பட்டது.

இதற்காக மருத்துவவர்கள் அவரது சொந்த திசுக்களைக் கொண்ட ஆய்வகத்தில் பிரத்தியேகமாக வளர்க்கப்பட்ட தோலைப் பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக போராடி பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பிறகு சிறுமி சுமாயா முழுமையாக குணமடைந்துள்ளார் தற்போது 5 வயதாகும் சுமாயா தனது பெற்றோர் அப்துல் ரகுமான் மற்றும் சிட்டி அப்துல்லா ஆகியவருடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்.

அவரது தலைமுடி வளராததால் தழும்புகள் வெளியில் தெரியாமல் இருக்க அவர் தொப்பி அணிந்து கொள்கிறார். அவர் 2027 ஆம் ஆண்டு தனது தொடக்கப்பள்ளி தொடங்க தயாராகி இருக்கிறார்.

சுமாயா பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் வகுப்பறைக்கு தொப்பி அணிந்து வர அனுமதிக்குமாறு சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திற்கும் பள்ளிக்கும் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.