இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?
வைரலாகும் 'பவுலிங் ஆக்ஷன்' மோதல்..!!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் ராவல்பிண்டிஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் குவெட்டா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், சமூக வலைதளங்களில் அந்த வெற்றியை விட, மைதானத்தில் நடந்த ஒரு கசப்பான மோதல் தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்துவீச வந்தபோதுதான் அந்தச் சர்ச்சை வெடித்தது. ராவல்பிண்டிஸ் அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தார். உஸ்மான் தாரிக் பந்தை வீசத் தொடங்கிய தருணத்தில், திடீரென மிட்செல் ஸ்டம்புகளை விட்டு விலகிச் சென்றார்.
உஸ்மான் தாரிக் பந்தை முறையாக வீசவில்லை என்றும், அவர் பந்தை ‘த்ரோ’ (Throw) செய்கிறார் என்றும் நடுவரிடம் மிட்செல் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
ஒருமுறை மட்டுமல்லாமல், இரண்டாவது முறையும் உஸ்மான் தாரிக் பந்துவீச வந்தபோது மிட்செல் இதேபோல விலகிச் சென்று அவரை அவமானப்படுத்தினார். ஒரு பந்துவீச்சாளரின் ஆக்ஷனை (Bowling Action) ஒரு பேட்ஸ்மேன் களத்திலேயே கிண்டல் செய்வது அல்லது குறை கூறுவது அந்த வீரருக்குப் பெரும் அவமானமாகக் கருதப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உஸ்மான் தாரிக், தனது கையில் இருந்த பந்தைத் தரையில் ஓங்கி அடித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
உஸ்மான் தாரிக் மற்றும் மிட்செல் இடையே வாக்குவாதம் முற்றியதைக் கண்ட நடுவர்கள் உடனடியாகத் தலையிட்டனர். மிட்செலுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி, மீண்டும் விளையாட்டைத் தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்குப் பங்களித்தாலும், மிட்செல் எழுப்பிய அந்த ‘சந்தேகக் கேள்வி’ உஸ்மான் தாரிக்கின் பவுலிங் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருவேறான கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக இந்திய ரசிகர்கள், “விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பந்துவீசும் வீரர்களுக்கு மிட்செல் சரியான பாடம் புகட்டியுள்ளார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், பாகிஸ்தான் ரசிகர்கள் மிட்செல் ஒரு வீரரை இப்படிப் பகிரங்கமாக அவமானப்படுத்தியிருக்கக் கூடாது எனச் சாடி வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இது போன்ற சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு முறைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், உஸ்மான் தாரிக்கின் எதிர்காலம் என்னவாகும் என்பது விவாதப் பொருளாகியுள்ளது.