BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!!
சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) நேற்று(மே 29) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ட்ரைலர் லாரி மோதி 34 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BKE விரைவுச் சாலையில் BKE விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் காலை 9:50 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும்(SCDF) அவசர மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்தனர்.
அங்கு படுகாயம் அடைந்து கிடந்த ஓட்டுநரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இது குறித்த காணொளி ஆனது பரவி வருகிறது. அதில் விரைவுச் சாலையின் வலதுபுறப் பாதைகளுக்கு நடுவே மோட்டார் சைக்கிள் சரிந்து கிடப்பதும் அதன் பாகங்கள் சிதறி கிடப்பதும் தெரிகிறது.
விபத்திற்கு உள்ளான நபர் சாலையில் விழுந்து கிடக்கும் காட்சியுடைய காணொளியும் மற்றொரு புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக 29 வயதான டிரைலர் லாரி ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்று சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.