சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.
ஒருங்கிணைந்த இலக்கு நிலையம் அளித்த தகவலின்படி, ICA அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் மே 21ஆம் தேதி அன்று பதிவிட்டிருந்தது.
அந்த நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய ஒரு சரக்கு ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்யும் இயந்திரத்திற்குள் நுழைத்துள்ளனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெட்டிகளுக்குள் உடனடி நூடுல்ஸ் இருந்துள்ளது. ஆனால் சோதனையின் போது திரையில் கண்ட படங்கள் அதற்கு எதிராக இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த பொட்டலங்களுக்குள் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் கூடுதல் விசாரணைக்காக அந்த பெட்டிகள் சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ICA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் கள்ள சிகரெட்டுகளை வாங்குவதும், விற்பதும், விநியோகம் செய்வதும் அல்லது வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். அத்தகைய குற்றங்களுக்கு செலுத்தப்படாத தீர்வை விட 40 மடங்கு அதிக தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இதேபோன்று உணவுப் பொட்டலங்களில் தீர்வு செலுத்தப்படாத சிகரெட் வைக்கப்பட்டிருந்த சம்பவங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.