சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!!
சிங்கப்பூர்: சிராங்கூன் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுப்பகுதித் தடுப்பில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது Telegram குழுவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் விபத்து நடந்த நேரத்தில் அந்த இடத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் சாலை மிகவும் வழுக்கலாக இருந்துள்ளது.
அந்த சாலையில் வந்த ஒரு வெள்ளை நிற கார் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கியதில் சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதியது.
மேலும் அந்த காணொளியில் சம்பவ இடத்தில் காவல்துறை கார்களும் மோட்டார் சைக்கிள் பணியாளர்களும் விபத்து நடந்த இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் தெரிகிறது.
அப்பர் சிராங்கூன் நோக்கிச் செல்லும் சிராங்கூன் சாலையில் மே 16ஆம் தேதி காலை 10:15 மணி அளவில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) மே 16ஆம் தேதி அன்று 10:20 மணி அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் 64 வயதான கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த நபரை SCDF வீரர்கள் சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்த விசாரணையைக் காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.