வசதியா...? சுமையா..? சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள தொகை 2025 மூன்றாம் காலாண்டில் S$9.07 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாகும்.மேலும் இந்த நிலுவைத் தொகை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வாழ்க்கைச் செலவுகள் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வருமான அழுத்தம் போன்ற காரணங்கள் மக்கள் கிரெடிட் கார்டுகளை அதிகம் சார்ந்து செலவழிக்க வைக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, “இப்போது வாங்கி பிறகு செலுத்து” (Buy Now, Pay Later) போன்ற வசதிகள், பணமில்லா பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதும் கடன் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன.
கவனிக்கத்தக்க அம்சமாக, கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ள போதும், நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. இதனால், ஒருவருக்கு உள்ள சராசரி கடன் அளவு உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், தவணை செலுத்தத் தவறுபவர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
நிதி நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில், கிரெடிட் கார்டு வழங்குதலில் வருமான வரம்புகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும், பொதுமக்கள் தேவையற்ற கடன் பயன்பாட்டை தவிர்த்து நிதி ஒழுங்கை பேண வேண்டும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.