சிங்கப்பூரில் வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: உடனிருந்த ஆடவருக்கு 29 மாதங்கள் சிறை..!!
சிங்கப்பூரில் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி (M. Ravi) மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவருடன் போதைப்பொருள் உட்கொண்டதுடன், தனது வீட்டில் அதற்கு அனுமதி அளித்த ஆடவருக்கு 2 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 41 வயதான ஷான் லூ சி ஜியான் (Shawn Loo Zhi Jian) என்பவருக்கே நவம்பர் 16ஆம் தேதி நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்தது.
ஷான் லூ, போதைப்பொருள் உட்கொண்டது, தனது வீட்டில் போதைப்பொருள் உட்கொள்ள அனுமதி அளித்தது மற்றும் நீதிமன்ற விசாரணைக்குத் தடையாகச் செயல்பட்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, அப்பர் பூன் கெங் ரோட்டில் (Upper Boon Keng Road) உள்ள தனது வீட்டுக்கு முன்னாள் வழக்கறிஞர் எம். ரவியை ஷான் லூ அனுமதித்துள்ளார்.
அங்கு இருவரும் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் எம். ரவி வீட்டின் கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உதவி கோரப்பட்டு, அவர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 56.
சம்பவத்தைத் தொடர்ந்து ஷான் லூ கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், சம்பவத்தின்போது போதைப்பொருளை அப்புறப்படுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஷான் லூவுக்கு தற்போது 2 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.