2026 ஜனவரி 8 முதல் ஈஸிலிங்க் செயலி நிறுத்தம்..!! காரணம்.???
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் ஈஸிலிங்க் (EZ-Link) செயலி செயல்பாட்டில் இருக்காது. அந்தச் செயலியில் இருந்த அனைத்து அம்சங்களும் தற்போது சிம்பிளிகோ (SimplyGo) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஈஸிலிங்க் செயலியை பயன்படுத்தி வந்த பயனர்கள் சிம்பிளிகோ செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களின் ஈஸிலிங்க் கணக்குத் தகவல்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து, இரு செயலிகளின் கணக்கு விவரங்களையும் இணைக்க வேண்டும்.
இந்த மாற்றம் தொடர்பான தகவலை டிசம்பர் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வழியாக சிம்பிளிகோ பயனர்களுக்கு அறிவித்துள்ளது.
இதன் மூலம் பயனர்களின் கணக்குகளும் அட்டைகளும் சிம்பிளிகோ செயலிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸிலிங்க் கணக்குகளை சிம்பிளிகோ செயலிக்கு மாற்றிக் கொள்ளாதவர்களின் கணக்குகள் உடனடியாக அழிக்கப்படாது. ஆனால், மாற்றம் செய்யப்படும் வரை அந்தக் கணக்குகளுடன் தொடர்புடைய ஈஸிலிங்க் அட்டைகளை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்மாதம் 10ஆம் தேதி முதல் ஈஸிலிங்க் செயலி கட்டங்கட்டமாக செயல்பாட்டிலிருந்து விலக்கப்பட்டு வருவதாக சிம்பிளிகோ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஈஸிலிங்க் செயலியின் அனைத்து அம்சங்களும் சிம்பிளிகோ செயலியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு பயனர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் எளிதாக பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிம்பிளிகோ விளக்கம் அளித்துள்ளது.