டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!
தற்போது எரிபொருள் விலை உயர்ந்து வரும் காரணத்தினால் டாக்ஸி பயணங்களுக்கான மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக கிராப் நிறுவனமானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எந்த தேதி முதல்? மார்ச் 30 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை.
நொவினாவில் இருந்து ஆர்ச்சர்ட் வரையிலான நான்கு கிலோமீட்டர் குறுகிய தூர பயணத்திற்கு சுமார் எட்டு காசுகள் கூடுதல் கட்டணம் ஆகும்.
அதே நிலையில் அங் மோ கியோவில் இருந்து சிட்டி ஹால் வரையிலான ஏறத்தாழ 12 கிலோமீட்டர் பயணத்திற்கு ஆகும் கட்டணமானது 28 காசுகள் வரை கூடும்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்திலிருந்து சாங்கி விமான நிலையம் வரையிலான 30 கிலோமீட்டர் தூரம் பயணங்களுக்கு 80 காசுகள் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
மார்ச் 23ஆம் தேதி அன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், கிராப் கேப் செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது: சாலையில் கைகாட்டி ஏறும் டாக்ஸிகள் மற்றும் கிராப் செயலி மூலமாக முன்பதிவு செய்யப்படும் டாக்ஸிகள் என அனைத்து மீட்டர் பயணங்களுக்கும் இந்த கட்டண உயர்வானது பொருந்தும்.
ஒவ்வொரு 45 வினாடி காத்திருப்பு நேரத்திற்கும் ஒரு கிலோமீட்டர் முதல் 10 கிலோமீட்டர் வரை உள்ள ஒவ்வொரு 400 மீட்டர் பயணத்திற்கும் மற்றும் 10 கிலோமீட்டர் இருக்கும் மேலான ஒவ்வொரு 350 மீட்டர் பயணத்திற்கும் அடிப்படை கட்டணமானது 26 காசில் இருந்து 27 காசுகளாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
ஆரம்பக் கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் நான்கு இருக்கை வாகனங்களுக்கு $4.60 மற்றும் ஆறு இருக்கை உள்ள வாகனங்களுக்கு $4.80 என்ற பயண கட்டணம் தொடரும்.
எரிபொருள் விலையில் நிலையான தன்மை இல்லாத காரணத்தினால் ஓட்டுநர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஓட்டுனர்களுக்கு உடனடி உதவியாக கடந்த வாரம் எரிபொருள் பற்று சீட்டுகள் வழங்கப்பட்டதையும் அந்நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.